Tuesday, December 13, 2011

மயக்கம் என்ன ?

மு. பெரியசாமி.

"மச்சி.... ஓபன் தி பாட்டில்…"


"…..Handல glass, glassல scotch…."


"…..சுத்துது சுத்துது தலையும் சுத்துது குப்புன்னு அடிச்ச பீரினிலே …."

இது போன்ற வரிகள் இன்று சினிமா பாடல்களில் அதிகமாக இடம்பெறுவது சகஜமாகிவிட்டது. இது நம் நாட்டில் குடிப்பழக்கம் அதிகமாகியிருப்பதை தெளிவாக காட்டுகின்றது. முன்பெல்லாம் ஏதோ ஒருசில கட்சிகளில் மட்டுமே சினிமாக்களில் இடம்பெற்ற குடிக்கும் காட்சிகள் இன்று குடும்பத்தினர் அனைவரும் பார்க்கும் தொலைக்காட்சி மெகாசீரியல்களிலும் வெகு சகஜமாக இடம் பெற தொடங்கிவிட்டது. இன்று ரேஷன் கடைகளுக்கு வரும் கூட்டத்தை விட டாஸ்மாக் கடைகளுக்கு அதிகமாக கூட்டம் வருகின்றது. இப்பொழுதெல்லாம் 13 அல்லது 14 வயதிலேயே குடிபழக்கத்திற்கு பெரும்பாலனவர்கள் அடிமையாகிவிடுகின்றனர் என்கின்றன ஆய்வுகள்.

மதுவின்மூலம் வருமானம் ஈட்டும் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்த பழக்கத்தை (Abhari excise system) இன்றும் மாற்று முகமூடியுடன் நம் அரசாங்கம் கடைபிடிக்கின்றது. மது விற்பனையை ஒரு சாதனையாகவே நம் அரசாங்கங்கள் வெளியிட தொடங்கிவிட்டது. 1983- 84இல் டாஸ்மாக்கின் வருமானம் 139 கோடி , 2003இல் 3,469 கோடி, 2010இல் 14,750 கோடியாக அதிகரித்துவிட்டது. தமிழர்கள் இதிலும் சாதனை புரிகின்றனர் எனபது வேதனையான உண்மை.


மக்களின் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டிய அரசாங்கம் மதுவை விற்பனை செய்துகொண்டு “குடி குடியை கெடுக்கும்”, “குடிப்பழக்கம் உடல்நலத்திற்கு தீங்கானது”, “மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு” என்று வெட்கம் இல்லாமல் எழுதுகின்றது. இப்பொழுது  தமிழகத்தில் மேலும் 800 மது விற்பனை நிலையங்களை அரசாங்கம் தொடங்க இருக்கின்றது அதில் 200 elite shopகள் ஆகும்.

இந்தியாவில் சுமார் 62.5 மில்லயனுக்கும் அதிகமான மக்களுக்கு குடிப்பழக்கம் உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகின்றது. உலகிலேயே அல்கஹால் பொருட்களுக்கான மூன்றாவது மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் குடிப்பவர்கள் எண்ணிக்கை 30 சதவிகிதமாக உயரும் என தெரிவிக்கபட்டுள்ளது. இதைவிட வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் மது அருந்துவது  120% உயர்ந்திருக்கிறது என்பதுதான்.

ஒரு நிமிடம் , "ஒரு ஆண் குடிக்கும்பொழுது ஒரு பெண் ஏன் குடிக்க கூடாது? , அது ஏன் மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகின்றது" என்று சிலர் கேட்கலாம். ஒரு தெருநாய் சாலையில் சிறுநீர் கழிக்கின்றது எனும்பொழுது நான் ஏன் கழிக்ககூடாது என்று நீங்கள் கேட்பீர்களா? அது நமக்குதான் அசிங்கம் என்று நமக்கு தெரியும். அதுபோல்தான் இதுவும். மேலும் பெண்கள் மது அருந்துவதால் அதிகமான உடல் மற்றும் மன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்கிறது அறிவியல் உலகம். இதுதான் இயற்கையின் நியதியும் கூட. மேலும் இருபாலரும் மது அருந்துவது தவறு என்பதுதான் என் நிலைப்பாடு.

‘Weekend’ கலாச்சாரம், ‘Party’ என்று எப்பொழுதும் மது அருந்துவது; மகிழ்ச்சி என்று மது அருந்துவது; சோகம் என்று மது அருந்துவது, இவ்வாறு பல வழிகளில் இளம் தலைமுறையான நாம் சீரழிகின்றோம். பண்டிகை காலங்களில் மது விற்பனை அதிகரிப்பதே இதற்கு சான்றாகும். நம்மில் பலர் கேட்கலாம் "குடிப்பது என்பது என்னுடைய உரிமை, என்னுடைய வாழ்கையை நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன்." என்று. ஆனால் இத்தகைய எண்ணம் நம்முடைய மனதில் பன்னாட்டு பெருமுதலாளிகளால் திணிக்கப்பட்ட ஒரு விஷயம் என்பதை நாம் ஆழ்ந்து நோக்கினால் உணர முடியும். அவர்களின் ஆதாயத்திற்காக நம்மை இதில் மூழ்கடிக்கிறார்கள் என்பதை நாம் உணர மறுக்கிறோம்.

நம் நாட்டில் மதுப்பழக்கம் என்பது மேலை நாட்டிலிருந்து திணிக்கப்பட்ட ஒரு பழக்கமாகும். நம்மவர்கள் மது என்னும் விஷயத்திலும் மேலை நாட்டினரைத்தான் உதாரணம் காட்டுகின்றோம். ஆனால் அவர்கள் அந்த நாட்டில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மதுவை அளவாக அருந்துகின்றனர். ஆனால் நாம் அப்படியா?.

நம்மூரில் குடிப்பவர்களை கொஞ்சமாக குடிப்பவர், எப்பொழுதாவது குடிப்பவர், அடிக்கடி குடிப்பவர், எப்பொழுதும் குடிப்பவர் என்று வகைப்படுத்தி, அதில் அதிகமாக குடிப்பவர்களுக்குதான் பாதிப்பு ஏற்படும் என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றோம். எவ்வளவு குடித்தாலும் அதில்  பிரச்சனைகள் உள்ளன. குடிப்பவர்களில் சிலர் சொல்வார்கள் “நான் நினைத்தால் உடனே குடிப்பதை நிறுத்திவிடுவேன்” என்று. ஆனால் அது சாத்தியமல்ல. குறைந்தபட்சம் மதுவை விட்டு நான்கு ஆண்டுகள் விலகியிருந்தால் மட்டுமே அவர் மீண்டும் குடிக்கமாட்டார் என்பது சாத்தியமாகும். கஞ்சா, அபின், போன்ற போதைப்பழக்கத்தை கூட உடனே நிறுத்தினால் பெரிய பாதிப்பு ஒன்றும் கிடையாது. ஆனால் அதீத மதுப்பழக்கம் உள்ளவர்கள் உடனே மதுப்பழக்கத்தை நிறுத்தும்பொழுது பல்வேறு உடல் மற்றும் உளவியல் பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவம் கூறுகிறது. இது சில சமயங்களில் மரணத்தில் கூட முடியலாம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். இதற்கு தகுந்த சிகிச்சை மூலமே தீர்வு கண்டு குணப்படுத்த முடியும்.

பெரும்பாலாக குடிப்பழக்கம் உள்ளவர்கள் அவர்களுக்குள் இருக்கும் மற்றொரு முகத்தை வெளிபடுத்துவதற்கும், மன ஆபாசங்களை வெளிப்படுத்துவதற்கும் மது என்பது ஒரு முகமூடியாக அவர்களுக்கு தேவைப்படுகிறது. மனைவியிடம் வன்முறையாக நடந்துகொள்ளும் கணவர்களில் 85% பேர் குடிப்பழக்கம் உள்ளவர்கள் என ஒரு ஆய்வு குறிப்பிடுகின்றது. மேலும் மதுப்பழக்கம் பல்வேறு சமூக விரோதச் செயல்களுக்கும் காரணமாகின்றது. அரசு மதுக்கடைகள் 10 மணிக்கே மூடப்பட்டாலும் தனியார் மதுக்கடைகள் மற்றும் இரவு விடுதிகளில், நள்ளிரவு தாண்டியும் மது விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் பெண்கள் மற்றும் அப்பாவிகள் இரவில் சுதந்திரமாக நடமாட முடிவதில்லை.

நம்மிடம் குடிப்பழக்கம் பற்றிய பல்வேறு தவறான கருத்துக்கள் பரவியுள்ளன. குடிப்பதனால் உடல்வலி குறையும் என்பது உண்மையல்ல. மது நரம்புகளை மரத்து போக வைக்கிறது, அதனால் அப்படி ஒரு உணர்வு ஏற்படலாம், ஆனால் அதனால் ஏற்படும் பாதிப்பின் வலிகள் ஏராளம். மதுவில் எந்தவித ஊட்டச்சத்தும் இல்லை. மது அருந்தினால் சோகம் குறையும், நினைவாற்றல் அதிகரிக்கும், சக்தி கிடைக்கும் என்பது எல்லாம் உண்மை அல்ல. குடித்தபின் காபி குடிப்பதனாலோ, குளிர்ந்த நீரில் குளிப்பதாலோ ஆல்கஹாலின் தாக்கம்  குறைந்துவிடும் என்றும் சிலர் எண்ணுகின்றனர். அதுவும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.

மது உடலின் பெரும்பாலும் எல்லா உறுப்புகளையும் பாதிக்கக்கூடியது. அதில் ஒருசில என்னவென்றால், ஆண்மைக்குறைபாடு ஏற்படும்; இரைப்பை, கணையம், கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படும்; நரம்புத்தளர்ச்சி, நடுக்கம், தள்ளாட்டம், உளறல் போன்ற கோளாறுகள் ஏற்படும்; ரத்தகொதிப்பு, மாரடைப்பு, நீரிழிவு போன்றவை ஏற்படும்; கண்பார்வை பாதிக்கும்; உடல்திறன் குறையும்; இரத்தக்குழாய்கள, இதயம் பாதிக்கப்படும் இவ்வாறு மதுப்பழக்கத்தின் பாதிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். மேலும் மதுப்பழக்கம் உள்ளவர்கள் தங்கள்  வருமானத்தில் 3-45% மதுவிற்கு செலவு செய்கின்றனர் என்று ஒரு ஆய்வு கூறுகின்றது. மதுப்பழக்கதிற்கு ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் கிடையாது. எத்தனை குடும்பங்கள் மதுவினால் பாதிக்கப்பட்டு பல்வேறு துயரங்களை அனுபவிக்கின்றார்கள் என்பதை நம் அரசு இன்னும் கண்டுகொள்ள மறுக்கின்றது. தற்கொலை செய்துகொள்பவர்களில் 34% சதவிகிதம் பேர் குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்று ஒரு புள்ளிவிவரம் குறிப்பிடுகின்றது . பொருளாதார நஷ்டம், அடிமை மனப்பான்மை, சமூக அந்தஸ்து இழப்பு என எவ்வளவு இழப்பு இந்த மதுபழக்கத்தால்.

மதுப்பழக்கம் என்பது ஒரு நோய் என உலக சுகாதார நிறுவனம் (WHO) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.குஜராத், மிசோரம், மணிப்பூர், மற்றும் நாகாலந்தைப்போல மதுவிலக்கை எல்லா மாநிலங்களிலும் அமுல்படுத்த அரசுகள் ஏன் இன்னும் தயங்குகின்றது. உலகிலேயே இந்தியாதான் இளமையான தேசம் என்று மக்கள்தொகை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த இளைஞர்கள் குடிக்கு அடிமையாகி அவர்களின் திறனையெல்லாம் இழந்து நிற்பது நம் நாட்டிற்கு இழப்பு இல்லையா. நம் அரசாங்கம் என்ன முடிவு எடுக்கபோகின்றது??? நாம் என்ன முடிவு எடுக்கபோகின்றோம்????


-->

   மதுப்பழக்கத்திலிருந்து விடுபட......

      மதுப்பழக்கம் தவறானது என்று பல பேரும் ஒத்துக்கொள்கின்றோம். ஆனால் அதை கைவிட முடியாமல் தவிக்கின்றோம். நம்மிடம் இந்த பழக்கம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நமக்கு தெரிந்த நண்பர்கள் உறவினர்களுக்கு இப்பழக்கம் இருக்கலாம். அவர்கள் இவ்வளவு பாதிப்புகளுடன் துயரங்களை அனுபவிக்கப்போவதை நாம் பார்த்துகொண்டு சும்மா இருக்கபோகின்றோமா. அவர்களின் தவறை சுட்டிக்காட்டுவது நம் கடமையல்லவா. மதுப்பழக்கம் என்பது குனப்படுத்த கூடிய ஒரு நோய்தான். இந்த பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கு பல சிகிச்சை மையங்கள், மறுவாழ்வு மையங்கள், கவுன்சிலிங் என பல உள்ளன .'குடிப்பவருக்கு தெரியாமல் அவர்களின் குடிபழக்கத்தை குணப்படுத்த முடியும்', என்பது போன்ற பொய்யான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். அது உண்மைக்கு புறம்பான விஷயம். ஒரு சில அங்கிகரிக்கப்பட்ட மையங்கள் உள்ளன அவற்றை தேர்வு செய்யுங்கள்.

  ஒரு சில மையங்கள்:


     Addiction India

     Alcoholic Anonymous