Wednesday, March 13, 2013

இது வீட்டு நூல், நாட்டு நூல், உலக நூல்

மு. பெரியசாமி

(இக்கட்டுரையின் தலைப்பு திருக்குறளின் பொதுமைத்தன்மைப் பற்றி திரு. வி. கலியாணசுந்தரனார் அவர்கள் கூறிய கருத்து ஆகும் )

திருக்குறள், தமிழின் மற்ற அனைத்து நூல்களையும் விட தனிப்பெருமையும் சிறப்பும் வாய்ந்த நூல் ஆகும். ஏனென்றால் சுமார் 60க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள சிறப்புமிக்க நூல் திருக்குறள். முதன்முதலில் இலத்தீன் மொழியில் C.J. பெஸ்கி (வீரமாமுனிவர்) என்பவரால் 1730ல் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை பலரால் பல மொழிகளில் இன்றும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருகின்றது.
 திருக்குறளின் பெருமையை பற்றி பேசாத தமிழறிஞர்கள் இல்லை என்றே கூறலாம். சங்க கால புலவர்களான கபிலர், நக்கீரர், ஔவையார், சீத்தலை சாத்தனார் என அப்பொழுதே இதன் சிறப்பை பலர் வியந்து பாராட்டியுள்ளனர்.

"திருக்குறள் ஒன்றே போதும் உனக்கு அறிவு உண்டாக்க; ஒழுக்கத்தை கற்பித்துக் கொடுக்க; உலக ஞானம் ஏற்பட" என்கிறார் பெரியார்.
நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் ஸ்வைட்சர் என்னும் அறிஞரோ, திருக்குறளை வாழ்வுக்குரிய அன்புநெறியை கூறும் உயர்ந்த நூல் என்றும், உயர்ந்த ஞானத்தை புகட்டும் உயர்மொழிகளின் தொகுப்பு இதுபோல் உலக இலக்கியத்தில்  இல்லை என்றும் கூறிப் போற்றியுள்ளார். இப்படி பலர் திருக்குறளைப்பற்றி கூறிய புகழுரைகளை ஒரு பெரும் நூலாகவே தொகுக்கலாம். இத்தகு புகழுக்கு மிக முக்கிய காரணம் திருக்குறளின் எளிமை மற்றும் செறிவு மிகுந்த கருத்துக்கள்தான். பழந்தமிழ் இலக்கியங்களில் தலைசிறந்த நீதி நூல் திருக்குறள் என்றால் அது மிகையாகது.

உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, முப்பால், தமிழ்மறை, என பல பெயர்களில் திருக்குறள் போற்றப்படுகிறது. இதில் விந்தை என்னவென்றால் திருக்குறள் என்பதும் அதனை புகழ்ந்து கூறப்படும் பெயர்களில் ஒன்று. அதன் இயற்பெயர் என்னவென்று இன்னும் அறியப்படவில்லை. இதை இயற்றியவரின் பெயரான திருவள்ளுவர் என்பதும் அவரது இயற்பெயர் கிடையாது. அவரைபற்றிய வரலாறும் இன்னும் அறியப்படவில்லை. ஆனால் அவரைபற்றிய புனைக்கதைகள் பல உண்டு. அவரைப்பற்றி இதுவரை அறிந்தவை என்னவென்றால் அவர் ஒரு தமிழ்ப்புலவர் என்பதும் தமிழகத்தில் வாழ்ந்தவர் என்பது மட்டும்தான். இன்று நாம் ஓவியங்களிலும், சிற்பங்களிலும் கானும் உருவமும் திருவள்ளுவரைப் பற்றிய கற்பனை உருவமே ஆகும். திருக்குறளின் காலமும் இன்னது என்று சரியாக வரையறுக்கப்பட முடியவில்லை. அது சங்க காலத்தைச் சேர்ந்த நூல் என்றும், கி.மு. 30ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்றும் பலர் கூறுகின்றனர். இவற்றையெல்லாம் கடந்து நிற்கும் அதன் பெரும்புகழுக்கு அதனுடைய காலம் மாறாத உண்மை நெறி, ஆழமான கருத்துக்கள், கவிச்சுவை, எளிமை ஆகியன குறிப்பிடத்தக்க காரணங்களாகும். அதேபோல் எவ்வித சார்புமற்ற அதன் பொதுமைபண்பு (objectivity) மிக முக்கியமானதாகும். வள்ளுவர் எந்தவொரு மதத்தைபற்றியோ, இனத்தைபற்றியோ, நாட்டைபற்றியோ, மன்னனைப்பற்றியோ தனது திருக்குறளில் குறிப்பிடவே இல்லை. அந்த அளவிற்கு பரந்த மனப்பாங்கோடு குறளை இயற்றியுள்ளார். அதனால்தான் இன்றும் இந்துக்கள், இசுலாமியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், கிறித்துவர்கள் என பல சமயத்தாரும் திருக்குறளை சொந்தம் கொண்டாடுகின்றனர். 

இதுபோல் அக்காலத்தின் இலக்கிய மரபுகளை மீறி புதுமை படைத்த நூல் திருக்குறள். 'பிறப்பால் அனைவரும் சமம்' என்னும் சமத்துவ கொள்கையை பறைசாற்றிய நூல் திருக்குறள். எந்த ஒரு கருத்தையும் ஆராய்ந்து அதன் உண்மையை உணர வேண்டும் என்னும் பகுத்தறிவை பேசிய நூல் திருக்குறள். அக்காலத்திலேயே 'மது அருந்துவது கூடாது' என்கிற சமூக பொறுப்புணர்வை வெளிப்படுத்திய நூல் திருக்குறள். இப்படி ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும், ஒரு மன்னன் எப்படி இருக்க வேண்டும், ஒரு சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என பலதரப்பினரின் கடமைகளை உணர்த்தும் நூல் திருக்குறள். இவ்வாறு பல சமூக கருத்துக்களை உள்ளடக்கியது திருக்குறள்.


நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும், இப்படிப்பட்ட ஆழமான கருத்துக்கள் முழுக்கவும் ஒரு தனிமனிதனின் உருவாக்கம் மட்டுமே அன்று, அது அந்த சமுதாயத்தில் பரவியிருந்த கருத்துக்களின் வெளிப்பாடு. அப்படிப்பட்ட  சமுதாயம் எவ்வளவு பண்பட்டதாக இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதன் வழித்தோன்றிய சமுதாயமான நம் சமுதாயத்தை நாம் இன்று எப்படிப்பட்டதாக மாற்றிவைத்திருக்கின்றோம். இப்படி ஒரு நூலை இயற்றிய வள்ளுவருக்கு கோட்டமும் சிலையும் அமைத்ததோடு சரி (அவைகளின் நிலைமையும் என்னவென்பதை, அங்கு செல்பவர்கள் கண்கூடாக பார்க்கலாம்). இவ்வளவு அற்புதமான நூலையும் அதன் செறிவான கருத்துக்களையும்  நாம் நம்முடைய சமூகத்தில் எந்த இடத்தில் வைத்திருக்கின்றோம். நம்மில் எத்தனை பேருக்கு குறைந்தது 10 திருக்குறளை அதன் அர்த்தத்துடன் தெரியும்? தேசிய நூலாகவே அறிவிக்க தேவையான அனைத்து தகுதிகளையும் உடைய திருக்குறளுக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவம் என்ன? சாக்கிரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், கான்பூசியஸ், சேக்சுபியர் என பிற நாட்டு  அறிஞர்களை போற்றும் நாம், நம்  நாட்டு அறிஞர்களையும், தத்துவ ஞானிகளையும் என்று போற்ற போகிறோம். நாட்டுப்பற்று, மொழிப்பற்று என்று நாம் கூவுகிறோம், ஆனால் நம்முடைய நாட்டை சேர்ந்தவர் நம்முடைய மொழியை சேர்ந்தவர் என்றால் எப்பொழுதும் இளக்கார மனப்பான்மைதான். இதை எப்பொழுது மாற்றிக்கொள்ள போகின்றோம்.