Wednesday, November 28, 2012

இரத்ததானம்: ஒரு விழிப்புணர்வு கட்டுரை

மு. பெரியசாமி


இரத்ததானம் செய்வீர்! உயிர் காப்பீர்!

பிறரின் இறப்பிற்கு கண்ணீர் கொடு! பிறரின் கண்ணீருக்கு இரத்தம் கொடு!

மனிதநேயத்தை சொற்களால் அல்ல இரத்ததானத்தால் வெளிப்படுத்துவோம் !

இது போன்ற வாசகங்கள் தொலைக்காட்சி விளம்பரங்களின் இடையே பிரபலங்கள் கூறுவதை நீங்கள் விரைவில் கேட்க நேரலாம் (அரசு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முனைப்பாய் இருந்தால்). ஏனென்றால் இரத்ததானத்திற்கான தேவை ஆண்டுதோறும் 5 சதவீதம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. ஆனால் பல இடங்களில் பற்றாக்குறைதான்  மிக அதிகளவில் உள்ளது.

இரத்ததானத்திற்கு தடையாக பல்வேறு மூடநம்பிக்கைகள் நம் நாட்டில் பரவிக்கிடக்கின்றது. நான் எனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் எனது கல்லூரி மூலமாக முதல்முறையாக இரத்ததானம் செய்துவிட்டு வீடு திரும்பினேன். என் கையில் இருந்த பிளாஸ்திரியை(band-aid) பார்த்துவிட்டு எனது தாயார் காரணம் கேட்க, நானும் இரத்ததானம் செய்ததை கூறினேன். கச்சேரி ஆரம்பமானது! ஏன் இரத்தம் கொடுத்தாய்? என்னை கேட்காமல் ஏன் கொடுத்தாய்? என்று பல கேள்விகள். அடுத்த நாள் உறவினர்களிடம் இருந்து வசைகள் மற்றும் மிரட்டல்கள். அவர்கள் அனைவருக்கும் விளக்கம் கூறினாலும் அதை அவர்கள் ஏற்க விரும்பவில்லை. ஒவ்வொருவரும் புதுப்புது தவறான விளக்கங்களை கூறினார்கள்.

இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் நடந்தது. எனது நெருங்கிய உறவினர் ஒருவரின் மகன் பன்னிரண்டாம் வகுப்பு அறிவியல் பிரிவு படித்துகொண்டிருக்கின்றான். அவன் என்ன கூறினான் என்றால், இரத்ததானம் திருமணத்திற்கு முன் செய்தால் உடல்நலக்கேடு ஏற்படும் திருமணத்திற்கு பிறகு செய்தால் பிரச்சனை இல்லை என்றான். இவ்வாறு இரத்ததானம் பற்றிய மூடநம்பிக்கை என்பது கற்றவர் கல்லாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் பலரிடம்  பரவிக்கிடக்கின்றது. ஆனால் இரத்ததானம் என்பது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்காத, பாதுகாப்பான செயல்பாடு ஆகும். அதை அறியாமல் தவறான நம்பிக்கைகளை கொண்டிருப்பதால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இரத்ததானம் குறைவாகவே உள்ளது.

உலக மக்கள் தொகையில் 15 சதவீதமே உள்ள உயர் வருவாய் நாடுகளில் 50 சதவீத இரத்ததானம் செய்யபடுவதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுகின்றது. நம் நாட்டில் இரத்தத்திற்கான தேவை 4 கோடி யூனிட் ஆனால் இருப்பதோ வெறும் 40 இலட்சம் யூனிட்தான் என ஒரு புள்ளி விவரம் கூறுகின்றது. இரண்டு நொடிக்கு ஒருமுறை யாரேனும் ஒருவருக்கு இரத்தம் தேவைப்படுகின்றது. நம்மில், சராசரியாக மூன்றில் ஒருவருக்கு வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் இரத்தம் தேவைப்படுகின்றது. இரத்தம் கொடுக்க தகுதியானவர்களில் வெறும் 4 சதவீதம் பேர் மட்டுமே இரத்ததானம் செய்கின்றனர். இவ்வாறு இரத்த தானத்திற்க்கான தேவையை பல்வேறு புள்ளிவிவரங்களின் மூலம் அடுக்கிகொண்டே போகலாம்.

நம் நாட்டில் இரத்ததானம் செய்வதற்கு நீங்கள் 18 வயதை கடந்தவராகவும் 60 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உங்களது உடல் எடை 45 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும். உங்கள் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிற்கு குறையாமல் இருக்க வேண்டும். மேலும் ஒரு சில குறிப்பிட்ட நோய்கள் கடந்த சில நாட்களில் இருந்திருக்ககூடாது. இதுபோன்ற சில அடிப்படை தகுதி உடையவராக நீங்கள் இருக்கவேண்டும். இவை அனைத்தையும் இரத்தம் கொடுப்பதற்கு முன் நீங்கள் பூர்த்தி செய்யும் படிவத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலம், குழந்தை பிறந்து தாய்ப்பால் கொடுக்கின்ற காலம் மற்றும் மாதவிடாய் நாட்களில் அதீத இரத்தப்போக்கு மற்றும் வலி இருக்கும்பொழுது இரத்ததானம் செய்யமுடியாது.மது அருந்திய மற்றும் புகை பிடித்த  அடுத்த 24 மணி நேரத்திற்கு இரத்ததானம் செய்யமுடியாது. மேலும் இரத்தம் கொடுப்பதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு நன்றாக உணவு உண்டிருக்க வேண்டும்.


பொதுவாக இரத்ததானம் செய்ய நீங்கள் சென்றீர்களானால் முதலில் ஒரு படிவத்தை கொடுத்து பூர்த்தி செய்யச் சொல்வார்கள். அது உங்கள் உடல்நிலை சம்பந்தப்பட்ட விவரங்களை கோரும்  வினாக்கள் அடங்கிய படிவமாகும். பின்னர் உங்கள் எடை, இரத்த அழுத்தம் போன்றவற்றை பரிசோதிப்பார்கள். அனைத்து விவரங்களும் பெறப்பட்ட பின்னர் உங்களது முழங்கை மடிப்பில் சரியான நரம்பை கண்டறிந்து இரத்தம் எடுப்பதற்கான ஊசியை உட்செலுத்துவார்கள். அந்த இரத்தமானது சோடியம் சிட்ரேட், பாஸ்பேட், டெக்ஸ்ட்ரோஸ் போன்ற வேதிப்பொருட்கள் அடங்கிய நெகிழிப்பையில் செலுத்தப்பட்டு பாதுகாக்கப்படும். பொதுவாக 250 மிலி முதல் 450 மிலி வரை இரத்தம் எடுக்கப்படும். ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுகின்றதா என்பதற்காக 10 முதல் 20 நிமிடம் காத்திருக்கச் சொல்வார்கள் அப்போது புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய சில உணவு வழங்கப்படும். இரத்தம் அளித்த 1 மணி நேரத்திற்கு புகை பிடிக்ககூடாது, 4 மணி நேரத்திற்கு மது அருந்தக்கூடாது. கையில் ஓட்டப்படும் பிளாஸ்திரியை 4 மணி நேரத்திற்கு எடுக்கக்கூடாது.

இந்த இரத்தமானது 13 வகை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். பின்னர் அந்த இரத்தமானது இரத்த சிவப்பு அணுக்கள் (RBC), இரத்த வட்டுக்கள் (Platelets), பிளாஸ்மாக்களாக  பிரிக்கப்பட்டு தேவைக்கேற்ப உபயோகப்படுத்தப்படுகின்றது. அதில் இரத்த சிவப்பு அணுக்கள் 35-42 நாட்கள் வரையிலும், இரத்த வட்டுக்கள் 5-7 நாட்கள் வரையிலும் பிளாஸ்மா ஒரு ஆண்டு வரையிலும் கெடாமல் பாதுகாக்க முடியும்.

இரத்தம் A, B, AB, O, என வகைப்படுத்தப்படும் என அனைவருக்கும் தெரியும். அதில் O  பிரிவு இரத்தம் தேவை மிகவும் அதிகமுள்ள வகையாகும். 'O-' பிரிவு "யுனிவேர்சல் டோனர்" என அழைக்கப்படுகின்றது. ஏனென்றால் இவ்வகை இரத்தம் அனைவருக்கும் பொருந்தும். ஆனால் இது இரத்த சிவப்பு அணுக்களுக்கு மட்டும்தான் பொருந்தும். பிளாஸ்மா என்று எடுத்துக்கொண்டால் 'AB+' தான் "யுனிவேர்சல் டோனர்" எனப்படும்.

நாம் தானம் செய்த இரத்தம் 4-6 வாரத்திற்குள் நம் எலும்பு மஜ்ஜை உற்பத்தி செய்துவிடும். ஆகவே  இரத்ததானத்தினால்  எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒரு சிலருக்கு மயக்கம் ஏற்படுவது போன்றவை ஏற்படலாம். மற்றபடி அது சாதரணமானதுதான். இரத்ததானத்தினால் உடல்நலத்திற்கு கேடு என்பதெல்லாம் ஆதாரமற்ற வாதங்கள்.

நம்மில் பலர் இரத்தம் என்பது விபத்து நேரத்தில் மட்டும்தான் பயன்படும் என்று நினைக்கின்றோம்.  ஆனால் அது உண்மையல்ல. இரத்தமானது இதய அறுவை சிகிச்சையின்போது , ஒருசில புற்றுநோய் சிகிச்சையின்போது , பிரசவத்தின் போது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின்போது, என பல நேரத்தில் பயன்படுகின்றது. இதனால் நான் இறுதியாக குறிப்பிட விரும்புவது ஒன்றுதான்,

இரத்ததானம் செய்வீர்! உயிர் காப்பீர்!