Wednesday, September 05, 2012

அடையாள நாள் அல்ல; இது ஒரு மகத்துவத் திருநாள்!

தியாநேசு ரவிச்சந்திரன் 

     இன்று ஆசிரியர்கள்  தினம்.  நம் ஆட்டோகிராப்பை சற்று திருப்பிப்பாருங்கள், நம் வாழ்வில் ஒளியை பரப்பிய நம் ஆசிரியர்களின் நினைவுகள் பல்லாயிரம்! ஆசிரியர் என்பவர் ஒரு மாணவனுக்குப் பாடம் சொல்லிவிட்டுப் போகிற நபர் அல்ல; அவனின் வாழ்கையையே தீர்மானிக்கிற ஆற்றல் படைத்தவர். எனக்கு நீண்ட காலமாகவே ஒரு கேள்வி சற்று புதிர்போல் விளங்காது நிற்கிறது. 'ஆசிரியர்' என்பது ஒரு பணியா? ஊழியமா?? அல்லது தொண்டா??

  இக்கேள்வியை ஆசிரியர்களிடம் கேட்டால் தொண்டு அல்லது சேவை என்பார்கள்! ஏன்? அவர்களுக்கு உதியம் என்றொன்று உண்டு, ஆனால் அவர்களின் பணிக்கு அது ஈடாகும் என்று சொல்லமுடியாது. நம் பண்பாட்டில் ஒரு வழக்கம் உண்டு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று. இதில்  தெய்வத்தை விட்டுவிடுங்கள், அது நம் பார்வையில் வராது. ஆனால், நாம் 'குரு' என்பதை மாத-பிதாவிற்கு நிகராக வைத்திருக்கிறோம். ஒரு தாய், நான் ஆறு வருடங்களாக ஏன் பையனுக்கு தாயாக வேலைபார்க்கிரேன் என்று ஒரு பொழுதும் கூற மாட்டாள். எந்த தகப்பனும் என் மகளுக்கு தந்தையாக பல்லாண்டு காலம் பணிசெய்து கொண்டிருக்கிறேன் என்று சொல்ல மாட்டான். எப்படி தாய் தந்தை ஒரு குழந்தைக்கு உறவுமுறையோ, அதேபோலத்தான் ஆசிரியரும். அது அக்குழந்தையின் வாழ்நாள் முழுவதும் தொடரும் பந்தம். 

    எனவே அப்படி ஒரு புனிதமான உறவுமுறை என்று சொல்லும்பொழுது, ஒவ்வொரு மாணவனையும் தங்களது பிள்ளைகளாக ஆசிரியர்கள் நினைக்க வேண்டும். தன்னிடம் படித்த மாணவன் தோல்வியுற்றான் என்றால் (பாடத்திலும் வாழ்க்கையிலும்) , ஆசிரியர்கள் வருத்தப்பட வேண்டும்; பொறுப்பேற்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் அவ்வாறு இருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே. வெறும் பாடம் நடத்துவது மட்டும் அவர்களின் கடமையல்ல. ஏனெனில், அவர்களின் பங்கானது மாணவர்களின் வாழ்கையை மட்டும் தாக்கப்போவதல்ல, அவர்களின் வருங்கால தலைமுறையும் தான். இதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.

   சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருமுறை இந்துக்கள் சட்டம் (Hindu Law) தொடர்பாக வழக்கு ஒரு நடந்துகொண்டிருந்தது. அப்போது நீதியரசர் முன் அந்த வழக்கை ஒரு மூத்த வழக்கறிஞர்  நடத்திக்கொண்டிருந்தார். அவர் மிக வயதானவர்; மிக மிக மெதுவாக நிதானமாக ஜவ்வைபோல் இழுத்து இழுத்து, கருத்துக்கள் எல்லாம் நன்கு விளங்கும்படி தன வாதங்களை முன்வைத்துக்கொண்டிருந்தார். பொறுமை இழந்த நீதியரசர், சற்று வேகமாய் வழக்கை முடிக்கும் எண்ணத்தில் அவரைப் பார்த்து, "உங்கள் வாதங்கள் புரிகின்றன, நீங்கள் அடுத்த விஷயத்திற்கு போலாம்" என்றார். அப்போது நிமிர்ந்த பார்வையுடன்  நகைத்த அந்த வழக்கறிஞர் நீதிபதியைப் பார்த்து, "மை லார்ட், நீங்கள் சென்னை சட்டக்கல்லூரியில் படிக்கும்பொழுது இந்துக்கள் சட்டத்தில் எத்தனை மதிப்பெண் வாங்கினீர்கள்  என்று  நினைவிருக்கிறதா??" என்று வினவினார். ஒரு நீதிமன்றத்தில் அப்படியெல்லாம் நீதிபதியைப் பார்த்து ஒரு வழக்கறிஞர் கேள்வி கேட்க முடியாது. உடனே அந்த அமர்விலிருந்த மற்றொரு நீதியரசரிடம் தான் அந்த பாடத்தில் தவறியதை சற்று தயக்கத்துடன் சொன்னார். அப்போது சிரித்துக்கொண்டே அந்த வழக்கறிஞர், " ஐயா, நான் அதை கல்லூரியில் நடத்தும்போது தங்களுக்குப் புரியவில்லை அதனால்தான் இப்போதாவது சற்று புரியும்படி உங்களுக்கு நடத்த முயன்றேன்" என்று வேடிக்கையாய் சொன்னாறாம். அந்த வழக்கறிஞர் தான் அந்த நீதிபதியின் கல்லூரி ஆசிரியர். ஒரு ஆசிரியரைத்தவிர வேறு யாராவது அந்த இடத்தில் அப்படி உரிமையுடன் பேச முடியுமா??

   பள்ளி கல்லூரிகளிலெல்லாம் இன்றைக்கு ஆசிரியர்கள் தினம் என்ற பெயரில் நிறைய சடங்குகளெல்லாம் நடக்கும். ஆனால் இத்திருநாளில், ஒவ்வொரு மாணவனும் (மற்றவர்களும்  தான்) தங்களது ஆசிரியர்களின்  பங்கை உணர வேண்டும். அவர்களின் ஊக்கமே நம்மை இத்தனை காலமும் அழைத்துவந்துள்ளது என்று புரிந்துகொள்ள வேண்டும். ஆசிரியர்கள், தங்களின் உண்மையான கடமையை உணருதல் அவசியம். நீங்கள் ஒன்னும் விற்பன்னர்கள் இல்லை, உங்களின் அறிவை பணத்திற்கு விற்க; நீங்கள் பணி செய்வதில்லை, ஊதியதிர்கேற்ப வேலை பார்பதற்கு. நம் வாழ்வில் நினைவுபடுத்தப்படுகிற, நம்மை ஊக்கப்படுத்திய  நம் ஆசிரியர்களெல்லாம் ஏதோ ஒரு வகையில் ஒரு சராசரி ஆசிரியரைப்போல் இல்லாமல் வேறுபட்டிருப்பார். ஆசிரியர்கள் பொதுவாக அப்படி இருப்பதில்லை என்பது சற்று வருத்தமே. இந்நாளானது, ஆசிரியர்களுக்கான அடையாள நாளல்ல, ஆசிரியத்தின் மகத்துவத்தை அனைவரும் புரிந்துகொள்ளும் திருநாள்! ஆசிரியர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்...