Wednesday, June 13, 2012

அந்த கேள்விக்கு வயது 102

தியாநேசு ரவிச்சந்திரன்

     சமீபத்தில் இணையத்தில் புத்தகங்களைத் தேடிக்கொண்டிருக்கையில் ஒரு புத்தகத்தின் தலைப்பு என்னை ஈர்த்தது. "அந்த கேள்விக்கு வயது 98" என்பதுதான் அத்தலைப்பு. அதென்ன அப்படி ஒரு தலைப்பு என்று என்னை சிந்திக்க வைத்தது. ஏதோ ஒரு கேள்வி தொண்ணூற்றிஎட்டு ஆண்டுகளாக அந்நூலினுடைய ஆசிரியர் திரு. இரா.எட்வினை குடைந்துகொண்டிருக்கிறது என்று விளங்குகிறது. அது என்ன 98 ஆண்டுகள் பழமையான கேள்வி என்று பார்த்தால், அதற்கு ஒரு ஆழகான விடை அந்நூலின் ஒரு கட்டுரையில் கிடைக்கிறது.

     பாரதியார் புதுவையில் வாழ்ந்த காலத்தில், எழுத்தாளர் வ. ராமசாமி ஐயர் அவரைப்பார்க்க அவர் வீட்டிற்கு வருகிறார். வ.ரா என்றால்தான் சமூக இலக்கிய உலகில் அவரைத் தெரியும். அவர் பாரதியின் வீட்டுக்கதவைத் தட்ட, பாரதியார் கதவைத் திறந்தார்.  பாரதிக்கு ஆங்கிலம் நன்கு தெரியும், எனவே ஆங்கிலத்தில் பேசினால் பாரதி மகிழ்வார், தன்னை அறிவாளி என்று ஏற்பார் என நினைத்த வ.ரா ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார். “உன் அளவுக்கு அந்தாளு இங்கிலீஸ் பேசறான்டா பாலு. நீயே பேசி அனுப்பு” என்று கதவைத் திறந்துவிட்ட பையனிடம் சொல்லிக்கொண்டே பாரதி உள்ளே போகிறார். திகைத்த வ.ரா பாரதியைப் பார்த்து, "ஐயா நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன்" என்றார். ஆங்கிலத்தில் பேசியதால் நீ பாலுவைதான் பார்க்கவந்தாயோ என்று நினைத்தேன் என்று நயமாகக்கூறிவிட்டு  பாரதியார் ஒரு கேள்வி கேட்டார்,

“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்களோ தெரியவில்லையே ?? ”

     இதுதான் அந்தக் கேள்வி, அவர் கேட்டது 1910-ஆம் ஆண்டு. அந்தப் புத்தகம் வெளிவந்தது 2008-இல்,  எனவே அக்கேள்விக்கு வயது 98 என்கிறார் ஆசிரியர், இப்போது வயது நூற்றாண்டு கொண்டாடிய 102! நூறு ஆண்டுகளுக்கு முன்பு அன்று பாரதி கேட்ட கேள்வி இன்றுவரை மிச்சப்பட்டுக்கிடக்கிறது என்பதுதான் நூலாசிரியருடைய ஆதங்கம்.

    இப்போது நாம் அந்தக்கேள்விக்கு வருவோம். ஆங்கிலத்தில் பேசினால்தான் நாம் அறிவாளிகள் என்று கருதப்படுவது இன்றைக்கும் நம் சமூகத்துடைய நடைமுறையாக இருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பும் இதே நிலைதான் இருந்திருக்கிறது. நாம் அடிமை நிலையிலிருந்து விடுபட்டிருக்கிறோமே தவிர, அடிமை மனத்திலிருந்து நாம் இன்னமும் மீளவில்லை. அன்றைக்கெல்லாம் ஆங்கிலேயர்களுடைய ஆதிக்கம் இருந்தது. ஆங்கிலம் தெரிந்தால்தான் அரசுப்பணி என்ற நிலை இருந்தது. வெள்ளைக்காரன் போய்விட்டான், இன்னமும்  வெள்ளையனின் மொழியும் நிறமும் நம்மை ஆள்கிறது. வெறும் அரசாங்கத்தின் மொழியாக மட்டுமல்ல, சமூகத்தின் மொழியாக மட்டுமல்ல, உள்மனத்தில் நம்மை ஆள்கின்ற மொழியாகவும் ஆங்கிலமே இருக்கிறது. இது எவ்வளவு பெரிய அடிமைத்தனம்? ஆங்கிலமே பயன்படுத்தக்கூடாது என்பது இதன் பொருள் அல்ல. இரண்டு தமிழர்கள் பேசிக்கொள்ளும்போது ஆங்கிலத்திற்கு அங்கு என்ன வேலை என்பதுதான்.

 பெரும்பாலான பள்ளிக்கூடங்களிலே நாம் பார்க்கிறோம், ஆங்கிலத்தில் பேசாவிட்டால் அல்லது தமிழில் பேசினால் மாணவர்களுக்குத் தண்டனை. ஆங்கிலம் உலக மொழி எனவே அவர்களுக்கு அத்தகு பயிற்சி தேவை என்கிறார்கள் அது உண்மைதான். ஆனால் குழந்தைகளின் தாய்மொழித் திறனையும் உடன் வளர்க்க எந்த முயற்சியும் பள்ளிகள் எடுப்பதில்லை. விளைவு, நாமே நம் மொழி மதிப்பற்றது என்று எண்ணுகிறோம்; நம் மொழியை மறந்தும்விடுகிறோம். பன்னிரெண்டாம் வகுப்பில் தமிழ் மொழியை தேர்வு செய்ய தயங்குகிறான் காரணம், அவனால் அதிக மதிப்பெண் எடுக்க முடியாதாம்! வீட்டில் என்னைப்பெத்த அம்மா எனக்கு சோறு போடமாட்டேன் என்கிறாள், அதனால் பக்கத்து வீட்டாரிடம் கையேந்துகிறேன் என்பதுபோலல்லவா இருக்கிறது?

    இங்கிலாந்து நாட்டிற்கு மிக அருகாமையில் உள்ள பிரான்ஸ் நாட்டில் பிரெஞ்சு மொழிதான் அவர்களின் முக்கிய மொழியாக உள்ளது. ஜெர்மனி-இல் கூட ஜெர்மன்  மொழிதான் வாழ்கிறது. அவர்களின் ஆட்சி மொழியாக மட்டுமல்ல, கல்வி, அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுகள் உட்பட அனைத்தும் அவரவர் மொழியில்தான். தாய்மொழியிலே தான் எல்லப்பாடங்களையும் மேலைநாட்டுப் பிள்ளைகள் படிக்கிறார்கள். எங்கெல்லாம் அறிவியல் வளர்ந்திருக்கிறதோ அங்கெல்லாம் தாய்மொழி வழியாகத்தான் கல்வி நீள்கிறது. ஜப்பானியப் பிள்ளைகள் ஜப்பான் மொழியிலேதான் கல்வி கற்கின்றனர். சீனத்துப்பிள்ளைகள் சீன மொழிகளில்தான் படிக்கின்றனர். வல்லரசு நாடுகள் அனைத்திலும் இப்படித்தான். இந்தியா போன்ற காலனிய நாடுகள் பலவற்றிலும் கூட அவரவர் மொழிதான் வாழ்கிறது.

    இது எந்த மொழியின் மீதான எதிர்ப்புணர்வு அல்ல. நாம் இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்வது என்பது வேறு; இன்னொரு மொழிக்கு அடிமையாவது என்பது வேறு. மற்ற மொழியில் பேசுவதென்பது வேறு; தமிழறிந்த தமிழனிடமும் மற்ற மொழியில் பேசுவதென்பது வேறு. பாரதி அப்படி பிற மொழிகளை எதிர்க்கிறவராக இருந்திருந்தால் பிற மொழிகளை அவர் கற்றிருக்கமாட்டார். "யாமறிந்த மொழிகளிலே" என்று பாடியவரில்லையா? பல மொழிகளிலும் புலமை பெற்ற பாரதியார் தான் தமிழ் தெரிந்த தமிழனிடமும் ஆங்கிலத்தில் பேசுகிறாயே இது அவமானமாக இல்லையா என்கிறார். அந்த அவமானத்தை இன்றுவரை நாம் துடைக்கவில்லை. தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திற்குச் சென்றாலும், அங்கு ஆங்கிலம் தெரிந்தவர்கள் கூட அவரவர் தாய்மொழியில் தான் பேசுகிறார்கள். ஆனால் இங்கோ ஆங்கிலத்தில்தான் பேசுவோம் அதுவும் அரைகுறை ஆங்கிலத்தில்.

     ஆங்கிலத்தில் பேசுகிற அனைவரும் அறிவாளி என்றால் அது அப்பட்டமான மூடத்தனம் இல்லையா? ஒருவன் என்ன பேசுகிறான் என்பதைவைத்தே அவன் அறிவாளியா முட்டாளா என்று கூறமுடியுமே தவிர எந்த மொழியிலே  பேசுகிறான் என்பதைவைத்து சொல்லமுடியாது. நம் தாய்மொழியிலே பேச நாம் ஏன் தயங்கவேண்டும்? ஆங்கிலம் பேசுவதில் என்ன கௌரவத்தைக் கண்டோம்? எனவே, மொழி என்பது நம் தாய்வழி மரபுவழிச் சிந்தனையாக தான் இருக்க முடியும். பிற மொழிகளையெல்லாம் கற்றுக்கொள்ளலாம். தமிழ் தெரியா பிற மொழியாளர்களிடம் அவர்கள் மொழி தெரிந்தால் அதில் பேசலாம். ஆனால், இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொள்ளும் போதுகூட தமிழில் உரையாடவில்லை என்றால் தமிழ் எப்படி வாழும்? தமிழர்கள் என்ற உணர்வு மட்டும் ஓரமாய் நம் மனத்தில் இருந்து என்ன பயன், நம்மை இணைக்கும் மொழி வாழவில்லை என்றால்? பாரதி அன்று கேட்ட கேள்வி நம் ஒவ்வொருவருக்கும் பசுமரத்தாணிபோல் நினைவில் நிற்க வேண்டும்.