Saturday, September 03, 2011

தூக்கு தண்டனையாகுமா ?

மு. பெரியசாமி.

மரணம்....... ஒவ்வொரு மனிதனையும் ஆழ்ந்த சிந்தனைக்கு அழைத்து செல்லும் ஒரு வார்த்தை. பல மனிதர்களின் வாழ்க்கையில் திருப்பங்களையும், எண்ணத்தில் மாற்றங்களையும் கொண்டு வரும் ஒரு நிகழ்வு. இந்த மரணம் என்பதை ஒருவன் செய்த தவறுக்காக அந்த சமுதாயத்தின் அமைப்பானது அவனுக்கு தண்டனையாக அளிப்பது சரியா? தவறா? என்பதுதான் இன்று நம் முன் எழுந்திருக்கும் கேள்வி. பெரும்பாலான நேரங்களில் நாம் இந்த மரண தண்டனை என்னும் விஷயத்தை உணர்ச்சி பூர்வமாக அனுகுவதால்தான், இதனை நாம் சரியாக மதிப்பிட முடிவதில்லை.

மரண தண்டனை என்பதை சட்ட புத்தகத்தில் வைத்திருப்பதற்கு சொல்லப்படும் முக்கிய காரணம், அதனால் கடும் குற்றங்கள் குறையும் என்பதுதான். ஆனால், உலகில் மரண தண்டனை நடைமுறையில் உள்ள நாடுகளிலும், மரண தண்டனை நடைமுறையில் இல்லாத நாடுகளிலும் நடக்கும் கடும் குற்றங்களின் எண்ணிகையை ஒப்பிடும் பொழுது, அதில் பெரும் மாறுதல்கள் ஒன்றும் இல்லை என்பதுதான் யதார்த்த நிலை. இதன் மூலம் கொலைக்கு இன்னொரு கொலை என்பது ஒரு பொழுதும் தீர்வாகாது எனபது தெளிவாகிறது.

"கண்ணுக்கு கண் என்கிற கொள்கை உலகையே குருடாக்குகிறது", என்ற காந்தியின் வார்த்தைகளில் உள்ள ஆழமான கருத்தை நாம் தெளிவாக உணர வேண்டும். கொலை செய்தான் என்பதற்காக, நாம் ஒருவனை கொள்வதும் கொலைதான் என்பதை நாம் உணர வேண்டும். தவறு செய்தவர்களை தண்டிப்பதனால் பாதிக்கபட்டவர்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்பதும் தவறான வாதம்தான். தவறு செய்தவன் தண்டிக்கபடுவதனால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் வந்துவிடாது. மாறாக சமுதாயத்தில் பழி வாங்கும் உணர்ச்சி என்பது மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றி விடுகிறது.

தண்டனைகள் என்பது எதிர்கால சமுதாயத்தினருக்கு படிப்பினை என்றும், சமுதாயத்தினை பயப்பட வைக்கும் கருவி என்றும்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு தவறு செய்பவர்களை பழி தீர்ப்பதர்க்காகவே தண்டனைகள் என்று நாம் சொல்லிக்கொண்டும், செய்துகொண்டும் இருக்கின்றோம். இதிலிருந்து நாம் கற்காலத்தின் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுபடவில்லை என்பதை தெளிவாக இந்த மனித சமுதாயத்தின் முன் பறை சாற்றுகின்றோம்.

நாம் ஒரு கருத்தை தெளிவாக உணர வேண்டும். இந்த சமுதாயத்தில் நல்லவர்கள் என்றும் கெட்டவர்கள் என்றும் யாரும் இல்லை, அவர்களது சூழ்நிலைகள்தான் அவர்களை அவ்வாறு பிரதிபலிக்கின்றன. "இங்கு நிற்பவர்களில் பாவம் செய்யாதவன் எவனோ, அவன் என் மீது முதல் கல்லை எறியுங்கள்" என்ற இயேசுவின் வார்த்தையின் அர்த்தமும் அதுதான். ஆனால் இங்கு தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது, அவர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இங்கு நான் தண்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுவது பழி வாங்குவதை அல்ல.

உண்மையான தண்டனை தவறு செய்தவனுக்கு அவன் செய்த தவறை உணர்த்துவதுதான். அது மட்டுமல்ல, எது சரி என்பதை அவனுக்கும் அவனை சார்ந்தவர்க்கும், இந்த சமுதாயத்திற்கும் உணர்த்துவதும் ஆகும்.

ஆனால் நாம் இன்று தண்டனைகள் என்று கூறி செயல்படுத்தும் அனைத்தும் தவறு செய்பவர்களை மேலும் வன்மையானவர்களாகவே மாற்றுகிறது என்பதுதான் இன்று சிறைச்சாலைகளில் நடக்கும் யதார்த்தமான உண்மை. வன்முறைகளை நாம் திருப்பி தாக்கும் பொழுது அது ஒரு பொழுதும் குறைவதில்லை, மாறாக அது மேன் மேலும் வளரத்தான் செய்கிறது. மரண தண்டனை என்பதை தீவிரவாதம், பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு போன்ற கொடும் குற்றங்களுக்காகதான் அளிக்கப்படுகிறது என்று நாம் கூறுகின்றோம். ஆனால், இதனால் இந்த தவறுகள் கண்டிப்பாக குறைவதில்லை என்பதுதான் யதார்த்தம். தீவிரவாதம் என்பது சமூக அவலங்கள் குறைந்தால்தான் குறையும், இந்த சமூக அவலங்கள் என்பது மரண தண்டனை என்னும் வன்முறையால் ஒரு பொழுதும் குறையாது என்பதை நம் உணர வேண்டும்.

சமுதாய அவலங்களை ஒழிக்கவும், சமுதாயத்தை நெறிப்படுத்தவும், சட்டங்களும் தண்டனைகளும் இன்றியமையாதது என்பது உண்மைதான். ஆனால் அது சமுதாயத்தில் வன்முறையை வளர்ப்பதாகவும், பல மனிதர்களை பழி தீர்ப்பதாகவும் இருக்கக்கூடாது. சட்டங்கள் கடுமையானதாக இருக்கலாம் ஆனால் அது பல மனிதர்களின் இதயங்களை காயப்படுத்தும் அளவு கொடுமையானதாக இருக்க கூடாது. மரண தண்டனை என்பது நம் சட்டத்தில் இருக்கும் வரை நாம் நம் தேசத்தை காந்தி தேசம் என்றும், அஹிம்சை தேசம் என்றும் கூறுவதற்கு வெட்கப்பட வேண்டும். மரண தண்டனையை ஒழிப்பதுதான் மக்களாட்சியின் முதிர்ச்சிக்கும், மனிதநேயத்தின் வளர்ச்சிக்கும் வழி வகுக்கும்.