Tuesday, February 14, 2012

காதல் வாழ்க!!

தியாநேசு ரவிச்சந்திரன்

(இக்கட்டுரையால் நான் எனது பெற்றோர்கள் மற்றும் முந்தய தலைமுறையினரிடம் வம்பு வளர்த்துக்கொள்கிறேன் என்பதுமட்டும் நிச்சியம்!)

     'காதல்' பற்றிய  நம் நாட்டு மக்களின் பார்வைக்கும் மேலைநாட்டு மக்களின் பார்வைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இங்கு இருக்கும் தடைகளில் ஆயிரத்தில் ஒன்றுகூட அங்கு இல்லை என்றும், அல்லது காதலுக்கு அங்கு தடையே இல்லை என்றும்  கூட துணிந்துசொல்லலாம். காதல் எதனால் இங்கு எதிர்க்கப்படுகிறது? ஏன் மேலைநாடுகளில் இல்லாத ஒரு தடை இந்தியாவிலே இருக்கிறது என்றால் அடிப்படையாக நாம் என்ன கருதிக்கொள்கிறோம் என்றால், பிள்ளைகள் தங்களுக்கான துணைவர்களை தேர்ந்தெடுக்கும் அறிவு பெற்றவர்களாக இருக்கமாட்டார்கள் எனவே பெற்றோர்கள் தான் அதைச் செய்யவேண்டும் என்றும், காதல் என்பது இயல்பாக அனுமதிக்கப்படுமானால் சமூகத்தில் ஒழுக்கம் தவறிப்போகும் என்பதுமான சான்றுகள் சமாதானங்கள் சொல்லப்படுகின்றன. எல்லாவற்றையும் செய்து கொடுக்கிற பெற்றோர்கள் அவர்களுக்கான துணையைமட்டும் தேடிக்கொடுக்க மாட்டார்களா, அதைமட்டும் ஏன் இவர்களாகவே தேடிக்கொள்ள வேண்டும் என்றும் ஒரு கேள்வி எழுகிறது. ஆனால், இதற்கான அடிப்படைக் காரணம் 'சாதி' என்பதுதான். காதல் அனுமதிக்கப்படுகிறபோது அவரவர் தங்கள் துணையை தங்கள் சாதியில் இருந்துதான் தேடிக்கொள்வார்கள் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே சாதி என்பது உடைபட்டுப்போகுமோ என்கிற அச்சத்தினால் சாதியைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கில் காதலுக்கு எதிர்ப்பு எழுகிறது. எனவேதான், காதலர் தினம் கூட பண்பாட்டின் பெயரால் இங்கு மறுக்கப்படுகிறது. 

     நாம் பார்க்கலாம்,
"அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள், 
இருவரும் மாறிப்பொக்கு இதயம் எய்தினர்" 
என்றுதானே கம்பராமாயணம் சொல்கிறது? இருவரும் காதல் வயப்பட்டார்கள் என்பதுதானே அதன் பொருள்? உண்மைதான்... அதற்கு அதுதான் பொருள். ஆனால், அது கம்பனின் கைவண்ணம். வால்மீகியின் கூற்றுப்படி ராமர் சீதை திருமணம் நடக்கிறபொழுது ராமருக்கு வயது பன்னிரண்டு, சீதைக்கு வயது ஆறு. அவர்கள் அவ்வயதில் அப்படியெல்லாம் காதலித்திருக்க வாய்ப்பே இல்லை; அப்படி எல்லாம் நடந்ததாக எங்கும் வால்மீகி கூறவுமில்லை. அவர்களின் திருமணம் ஒரு குழந்தைத்திருமணமாகவே நடந்துள்ளது. இந்தக் குழந்தைத்திருமணத்திற்குக்கூட என்ன அடிப்படை என்றால் சாதியை மீறிவிடக்கூடாது என்பதுதான். திருமணம் என்றால் என்ன என்றே தெரியாத வயதில் அதைச் செய்துவிட்டால், வேறு சாதியில் துணைதேட முனைய மாட்டார்கள் என்ற எண்ணம்தான். எல்லா அடிப்படையிலும் பெண்ணை மெல்ல மெல்ல கீழே அழுத்திவைத்து, எப்படி சாதி ஆதிக்கம் இருக்கிறதோ அப்படி ஆணாதிக்கத்தையும் இந்தச் சமூகம் தொடர்ந்து நிலைநிறுத்திவந்திருக்கிறது. 

     நாம் சற்று வெளிப்படையாகப்  பார்க்கலாம். பிராமண சமூகத்திலே உபநயனம் என்று ஒரு சடங்கு உண்டு. உபநயனம் என்றால் ஒரு பிராமண வீட்டில் பிறந்த ஒரு பையனை படிக்க அனுப்புவதாகும். அன்றைக்கெல்லாம் கல்வி என்றால் குருகுலவாசம்தான். வேதங்களைப் படிக்கச்செல்லும் போது அவன் இரண்டாவது முறையாகப்பிறக்கிறான் என்கிறது மனு. அச்சடங்கானது ஆண்பிள்ளைகளுக்கு மட்டும் தான் நடத்தப்படும். ஏன் பெண்பிள்ளைகளுக்கு இல்லையென்றால் பெண்களுக்குக் கல்வியே மறுக்கப்பட்ட சமூகத்தில் உபநயனம் எப்படி இருக்கமுடியும்? இந்தப் பெண்களிலே மட்டும் வேறுபாடே கிடையாது. எல்லாச் சாதியிலும் எல்லாச் சமூகத்திலும் பெண் என்பவள் அடிமைப்பட்டவள் தான். மனு மிகத்தெளிவாகச் சொல்கிறது "ஸ்ரீராந்த சூத்திர ஷாதினாம்" என்று. அதாவது, பிராமண வீட்டில் பிறந்தாலும் பெண் சூத்திரப்பெண் தானாம். நம் மண்ணில்தான் எந்த மரியாதைக்குரிய ஒன்றையும் - மொழி, நாடு, ஆறு, மலை - பெண்ணாக பாவித்து வணக்குவதுண்டு. அனால் வேதனையாக இருக்கிறது, பெண்ணுக்கு உண்மையில் இங்கு மரியாதையே இல்லை. 

     இந்தக்காதலில் கூட நிறைய மூடநம்பிக்கைகள் உள்ளன. நாம் காதல் தோல்வி என்பதை ஆணுக்கு ஒரு மாதிரியாகவும் பெண்ணுக்கு ஒரு மாதிரியாகவும் பார்க்கிறோம். இந்தக்காதல் வெற்றி தோல்வி என்பதுகூட வழக்கிலே பயன்படுத்தும் சொல்தான். காதலுக்கு வெற்றியும் கிடையாது தோல்வியும் கிடையாது. காதல் என்றால் அன்பு; ஒருவர் மீது நாம் வைத்திருக்கும் நேசம். நாம் மற்றவர் மீது வைத்திருக்கும் அன்பும் நேசமும் ஒருநாளும் தோற்றுப்போவதில்லை. ஆனால் வழக்கிலே ஒரு காதல் திருமணத்தில் முடிந்தால் மட்டுமே அக்காதல் வெற்றி பெற்றதாக நாம் கருதிக்கொள்கிறோம். அது தவறு. ஒரு ஆண் தான் காதலித்த பெண்ணை மணம்முடிக்க இயலவில்லை என்றால், மனம்வருந்தி, தாடி வைத்து, சில நாட்கள் கழித்து வேறு ஒரு பெண்ணை காதலித்தோ அல்லது திருமணம் செய்துகொண்டோ தன் வாழ்க்கையை சகஜமாக்கிக்கொள்வான். அதைத்தான்  சமூகம் விரும்பும். அனால், ஒரு பெண்ணுக்கு அவ்வாறு நேர்ந்தால், அவள் கற்ப்பிழந்தவள் அல்லது ஏமாற்றப்பட்டவள் என்றுதானே நாம் சொல்லுவோம்?

   பாகவதர் காலத்திலிருந்து பவர்ஸ்டார் காலம்வரை காதலில்லாத்  திரைப்படங்கள் ஏதேனுமுண்டோ? அத்திரைப்படக் காதலை தலைமுறை தலைமுறையாக ரசித்துக்கொண்டுதானே இருக்கிறோம்? ஆனாலும் நிஜவாழ்கையில் நாம் காதலை மறுப்பதென்பது திரைப்படங்களில் காதல் முறையாக காட்டப்படவில்லை என்பதையே சுட்டுகின்றது. திரையில் காதலர்கள் ஒன்றுசேர விரும்பும் நாம், நம் குடும்பத்தில் அதற்கு பச்சைக்கொடி காட்டாமல் எதிர்ப்பதற்கான காரணம் ஒன்றுதான். நம்மிடம் சமுதாய அநியாயங்களை எதிர்த்துப்போராடவும் பகுத்தறிவுச்சிந்தனைகளை ஏற்றுக்கொள்வதற்க்கும் தெளிவும் தைரியமும் இல்லை என்பதுதான். நம் கல்வி என்னதான் செய்கிறதோ.....

     இன்றைய தலைமுறையினர் சாதி ஆதிக்கத்தால் சற்று முன்னோக்கியே  சென்றுவிட்டனர்! நான் ஒரு முறை என் நண்பரிடம் காதல் திருமணம் செய்துகொள்வீரா என்றமைக்கு அவர் கூறிய பதில் மனவருத்தத்தைத் தந்தது. "நான் என் சாதியில் பிறந்த ஒரு பெண்ணை மட்டும்  தான் காதலிப்பேன்" என்றார். ஒற்றுமை வேற்றுமை பார்த்து வருவது காதல்அல்ல. எதிர்பார்ப்புகளை எண்ணி வருவதும் காதல் அல்ல. தேடிப்போவதும் காதல் அன்று. நான் வக்காலத்து வாங்கும் காதல் அதுவல்ல. ஆனால், நான் இவ்விடத்தில் ஒன்றை ஒத்துக்கொள்ள வேண்டும், காதல் என்ற பெயரில் காதலர் தினம் என்று சொல்லி நம் ஊரில் ஒருசில  சீர்கேடுகள் நிகழ்கின்றன. அவையெல்லாம் திரைப்படங்களில் காதல் தவறாகக்காட்டப்படுவதினாலும் வணிகமயமாக்குதலாளும்  விளைபவை. அது சில வணிகநிறுவனங்கள் தங்கள் சுய லாபத்திற்காக செய்கிறார்கள். அதை நம் இளைய தலைமுறையினர் முதலில் உணரவேண்டும். காதலர் தினத்தில்தான் தங்கள் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை.

     எனவே, இதுபோன்ற விவாதங்களையெல்லாம் கிளப்புகிறபோது நம் சமூகம் முன்வைக்கும் காரணங்களைச் சற்று கூர்ந்து கவனித்தால் நமக்கு உண்மை புரியும். எல்லாம் எது சார்ந்ததாக இருக்கிறது என்றால் சாதியைக் காப்பாற்றுவதாகவும் பெண்ணை அடிமைப்படுத்துவதாகவும் உள்ளது. மதம் என்பது இந்த இரண்டோடும் நேரிடைத்தொடர்புடையதாக இருக்கிறது. எனவே காதல் என்பதெல்லாம் மேலைநாடுகளிலிருந்து வந்தது என்று நினைத்து யாராவது தடுக்க நினைத்தால், அவர்கள் பழந்தமிழ் பண்பு அறியாதவர்கள் என்றுதான் பொருள். பழந்தமிழ் நாட்டில், பழந்தமிழ் இலக்கியங்களில் சாதி வேற்றுமைகளை எல்லாம் கடந்து காதல் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே காதல்தான் இரண்டிற்கும் ஒரு பெரிய மாற்று - சாதிஆதிக்கத்திற்கும் சரி பெண்ணடிமைத்தனத்திற்கும் சரி. ஒரு பெண்ணை தனக்கான துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிப்பதுதான் பெண்விடுதலைக்கான தொடக்கம். திருமண உறவுகளால் மட்டுமே நம்மிடையே நிலவும் வேற்றுமைகளைக் களைய முடியும். எனவே, "காதல் வாழ்க! சாதி ஆதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் வீழ்க!" என்கிற முழக்கமே காதலர்தினத்தின் உட்பொருள். ஆதலால் நண்பர்களே, காதல் செய்வீர்! காதல் செய்வீர்!!