Saturday, March 31, 2012

கூடங்குளந்தான் தீர்வா?


மு.பெரியசாமி 

(இது கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அல்லது ஆதரவான கட்டுரை அல்ல, தமிழகத்தின் மின்வெட்டு பிரச்சனை பற்றிய கட்டுரை)

மின்வெட்டு பிரச்சனை.........

தமிழ்நாட்டில் யாரிடம் இந்த வார்த்தைகளை சொன்னாலும் அவர் ஒரு பெருமூச்சு விட்டு அவருடைய சோகக்கதையை சொல்ல ஆரம்பித்துவிடுவார். இப்படி அனைத்து தரப்பினரையும் பொதுவாக பாதித்திருக்கிற பிரச்சனை இது. இந்த பிரச்சனைக்கு என்னதான் தீர்வு என்று அரசாங்கத்தைவிட அதிகமாக மக்கள் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.இதற்கு கூடங்குளந்தான் தீர்வு என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். இல்லை! இல்லை! வேறு வழி இருக்கிறது என்று இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள். நாம் இதற்கான தீர்வை முன்வைப்பதற்கு முன்னாள் இந்த பிரச்சனைக்கான காரணம் என்னவென்று பார்ப்போம்.

இந்த பிரச்சனையுடைய வேர் எங்கே உள்ளது என்று தேடிப்பார்த்தபோது அது நம்மை 1990ஆம் ஆண்டுக்கு அழைத்துச் சென்றது. அப்பொழுது நம் நாட்டின் பல துறைகள் தனியார்மயமாக்கபட்டது போல் மின்துறையும் தனியார்மயமாக்கப்பட்டது. அதனால் புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்த அரசாங்கம் முயலவில்லை. மேலும் மாநில அரசுகளையும் புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு நிதி கேட்டு வர வேண்டாம் என்றும் சொல்லிவிட்டது. ஆனால் எந்த தனியாரும் எதிர்பார்த்ததை போல் மின் உற்பத்தியில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. அதனால் நாட்டின் மின் உற்பத்தி குறைந்தது. மற்றொரு பக்கமோ ஆண்டுதோறும் மின்தேவை அதிகரித்துக்கொண்டே வந்தது. பின்னர் பிரச்சனை முற்றும் நேரத்தில் நம் அரசு ஒரு சில திட்டங்களை ஆரம்பித்துள்ளது. ஆனால் அவை உற்பத்தியை தொடங்க ஒன்னும் ஒரு சில ஆண்டுகள் ஆகும். இப்படி தேவை அதிகரித்தபொழுது உற்பத்தி அதிகரிக்கபடாதது முதல் பிரச்சனை. மேலும் சரியாக பணம் கொடுக்கவில்லை என்று சொல்லி தமிழகத்தில் மின் தயாரிக்கும் மின் உற்பத்தி நிலையங்களில் 4 மின் உற்பத்தி நிலையங்கள் ( ஜி.எம்.ஆர். வாசவி – 196MW, பிள்ளைபெருமாநல்லூர் – 330.5MW, மதுரை பவர் – 106MW, சாமல்பட்டி பவர் – 105.66MW ) உற்பத்தியை நிறுத்திவிட்டன. 

அடுத்து மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய 3130 MW மின்சாரத்தை கொடுக்காமல் வெறும் 2000 MW மின்சாரம் மட்டுமே கொடுக்கப்படுகின்றது. அடுத்த மிக முக்கியமான் காரணம் மின் இழப்பு(Transmission loss). அதாவது மின்சாரத்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கம்பி வழியே எடுத்துச்செல்லப்படும்பொழுது இழப்பு. இது போன்ற இழப்பு வெளிநாடுகளில் 8 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. ஆனால் நம் மாநிலத்தில் அது கிட்டத்தட்ட 25 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதற்கு காரணம் மின்மாற்றிகளிடையே மின்சாரம் கொண்டுசெல்லும் உயரழுத்த கம்பிகள் மற்றும் மின்மாற்றிகளிலிருந்து வீடுகளுக்கு மின்சாரம் கொண்டு செல்லும் தாழ்வழுத்த கம்பிகளின்  விகிதாச்சாரம் 1:1 என்ற அளவில் இருக்க வேண்டும். ஆனால் அது நம் மாநிலத்தில் சரிவிகிதத்தில் இல்லை. அடுத்து இரண்டு மின்மாற்றிகளுக்குமிடையே இடைவெளி குறைவாக இருக்க வேண்டும். அதுவும் நம்மூரில் இல்லை. இதுபோன்ற காரணங்களால் இழப்பு நம்மூரில் அதிகமாக உள்ளது. விவாதிக்கப்படாத இன்னொரு மிக முக்கிய காரணம் மின் திருட்டு. இது நம்மூர் அரசியல் நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் போன்ற நேரத்தில் மிக யதார்த்தமாக நடப்பது. ஆனால் அரசாங்கம் போதிய நடவடிக்கைகள் எடுப்பதில்லை. இப்படி மின் பற்றாக்குறைக்கான காரணங்களை அடுக்கிகொண்டே போகலாம். 

இப்ப கூடங்குளத்துக்கு வருவோம்

அதிகரித்துள்ள மின்வெட்டிற்கு, மக்கள் கூடங்குளத்தை காரணமாக கருத ஆரம்பித்துவிட்டார்கள். இதில் உள்ள உண்மைகளை பார்போம். இதுவரை நம் நாட்டின் எந்த அணு உலைக்கும் உற்பத்தி திறன் (plant load factor) 40 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது. கூடங்குளம் மூன்றாம் தலைமுறை நவீன உலை என்பதால் உற்பத்தி திறன் 70 சதவீதத்தை எட்டும் என்று வைத்துக் கொண்டாலும் 700 MW மின்சாரம்தான் உற்பத்தி செய்யும்.
 தமிழகத்திற்கு 50 % பங்காக 289 MW மின்சாரம் கிடைக்கும். அதில் மின் இழப்பு போக மீதம் 210 MW மின்சாரம் கிடைக்கும். ஆனால் நம் மாநிலத்தின் பற்றாக்குறையோ 2500 MW அளவை தாண்டுகின்றது. அதனால் கூடங்குளம் மட்டுமே தீர்வாகாது. மேலும் நாம் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும், கூடங்குளம் என்பது மின்வெட்டு பிரச்சனைக்கான காரணம் அல்ல. அது செயல்படுத்த முடியாத தீர்வுகளில் ஒன்று.

சரி செயல்படுத்த முடிந்த தீர்வுகளை காண்போம்

தற்பொழுதுள்ள தொழில்நுட்பங்களைக் கொண்டு அனல்மின், புனல்மின் மற்றும் அணுமின் ஆகிய மூன்று முறைகளில் மட்டுமே பெருமளவு மின்சாரத்தை தயாரிக்க முடியும். அனல்மின் நிலையங்களுக்கு இனி போதுமான நிலக்கரி கிடைப்பது அரிது, மேலும் இயற்கைக்கு பெரும் தீங்கு விளைவிக்கக்கூடியது. புனல்மின் நிலையங்களுக்கு நீர்போக்குவரத்து அதிகம் இருக்க வேண்டும், அதிக அளவில் அணைகள் கட்ட வேண்டும். அது மிகவும் சிரமமானது, மேலும் குறைவான அளவு மின்சாரமே கிடைக்கும். அணு மின் நிலையத்தை பொறுத்த வரை பல சாதகமான அம்சங்களும் இருக்கின்றன பாதகமான அம்சங்களும் இருக்கின்றன. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பாதுகாப்பு குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தை போக்காமல் அதை நடைமுறைபடுத்த முயல்வது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. சரி உடனடி மற்றும் நீண்ட கால மாற்று தீர்வுகள் என்னவென்று பார்போம். 

* குண்டு விளக்குகளுக்கு (Incandescent bulb) பதிலாக குழல் விளக்குகள் (Compact Fluorescent Lamps) உபயோகிப்பது. இது நீண்ட காலமாக கிடப்பிலிருக்கும் கோரிக்கை. இதை செயல்படுத்துவதன் மூலம் தமிழகம் 500 - 600 MW மின்சாரத்தை சேமிக்க முடியும். கேரளாவில் அரசாங்கம், குண்டு விளக்குகளுக்கு பதிலாக குழல் விளக்குகள் விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. ஒரு யூனிட் மின்சாரத்தில் குண்டு விளக்கு 25 மணி நேரம் மட்டுமே எரியும் ஆனால் குழல் விளக்கு 36 மணி நேரம் எரியும். மேலும் இதன்மூலம் குறைந்தது 40 இலட்சம் கார்பன் கிரெடிட்களை பெற முடியும், அதனால் அரசாங்கம் 194 கோடி முதல் 360 கோடி வரை இலாபம் ஈட்ட முடியும்.

* நமது மாநிலத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மோட்டார்கள் மிகவும் திறன் குறைவானதாக உள்ளது. அவற்றின் திறனை மேம்படுத்தி, பழுதானவைகளை மாற்றினால் சுமார் 1000 MW வரை சேமிக்க முடியும்.

* நம் மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளில் சுமார் 2500 MW திறனுள்ள மின் ஜெனரேட்டர்கள் உள்ளன. அவற்றை உபயோகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

* மின் இழப்பை 4 - 5 % அளவு குறைத்தால் கூட 1000 MW அளவிற்கு மின்சாரத்தை சேமிக்க முடியும். அதை அரசாங்கம் மின்மாற்றிகளுக்கு இடையே உள்ள தூரத்தை குறைப்பது, கம்பிகளுக்கு இடையே உள்ள விகிதாச்சாரத்தை சமமாக்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் குறைக்கலாம்.


* நீண்ட கால தீர்வுகளுக்கு  சூரிய ஒளி ஆற்றல், காற்றலைகள், ஜியோதெர்மல் ஆற்றல் போன்ற சுற்றுசூழலுக்குகந்த மரபுசார மின்சார ஆற்றல்களில் இனியாவது முதலீட்டை அதிகரிக்கவேண்டும்.இவற்றின் மூலம்  நம் தேவைகளை பெருமளவு பூர்த்தி செய்துகொள்ள முடியும். இது நீடித்த பயனையும் தரக்கூடியது. இப்படி இதன் சாதகமான அம்சங்களை அடுக்கிகொண்டே போகலாம். இதை பரவலாக்கும்போழுது இதன் செலவும் குறையும்.
* மின்சாரம் சம்பந்தமான ஆய்வுகளையும், புதிய முயற்சிகளையும் அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும். ஆனால் பொதுவாகவே அரசாங்கம் அறிவியல் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கபடுவதில்லை. இந்த கருத்தை அரசாங்கம் உடைத்தெறிய வேண்டும்.    

* கடைசியாக மேற்கூறிய தீர்வுகளில் உகந்தவற்றை செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின் உற்பத்தி செய்வதற்கு இப்படி பல மாற்று வழிகள் உள்ளன, ஆனால் நாம் அதில் அதிக ஆர்வம் காட்ட மறுக்கின்றோம். மேலும் இந்த விஷயத்தில் நாம் அரசாங்கத்தையும், மின் வாரியத்தையும் மட்டும் குறைசொல்லிக்கொண்டு இருப்பது சரியல்ல. நம் நாட்டில் மின்சாரம் சம்பந்தமாக மேற்கொண்ட ஆய்வுகள் பல நாம் நம்முடைய மின் உபகரணங்களை சிக்கனமாக உபயோகிப்பதாலும்; பழுதில்லாத, திறன்மிக்க மின்சாதனங்களை  உபயோகிப்பதாலும் நாம் பல ஆயிரம் MW மின்சாரத்தை சேமிக்க முடியும் என்கின்றது. நம்மில் எத்தனை பேர் நம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் மின்சேமிப்பு நடவடிக்கைகள் செய்திருக்கின்றோம், எத்தனை பேர் தேவைக்கேற்ப மின்சாதனங்களை உபயோகப்படுத்துகின்றோம், எத்தனை பேர் மின்சேமிப்பின் அவசியத்தை உணர்ந்திருக்கிறோம். வெகு சிலர் மட்டுமே. மாற்றத்தை முதலில் நம்மிலிருந்து தொடங்குவோம். மின்சாரத்தை சேமிப்போம் நாட்டின் எதிர்காலம் பிரகாசிக்க!.